பொதுப்பிரிவு மாணவர்கள், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் என்ற பாகுபாடு இல்லாமல் வழங்க பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உயர்கல்வி பயில்வதற்காக உத்தரவாதமின்றி வழங்கப்படும் கல்விக்கடனில் 67% கடன் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கிடைத்திருப்பதாகவும், மீதமுள்ள 33% மட்டும் தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் மிகவும் வருத்தமளிக்கிறது. கல்விக்கடனாக வழங்கப்படும் தொகையிலும் வங்கிகள் பாகுபாடு காட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.


இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உத்தரவாதமின்றி, கல்விக் கடன் வழங்குவதற்காக கடந்த 2015&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்விக்கடனுக்கான கடன் உத்தரவாத நிதியத்தின் வழியாக கடந்த 2016-17 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 4.10 லட்சம் மாணவர்களுக்கு, ரூ.13,797 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 67% கல்விக்கடன் பொதுப்பிரிவு மாணவர்கள் 2.75 லட்சம் பேருக்கு வழங்கப்படுள்ளது. இப்பிரிவினருக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் தொகை மொத்தக் கடனில் 70.50 விழுக்காடு, அதாவது 9730 கோடி ஆகும். ஆனால்,  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 23% அளவுக்கும், பட்டியலினத்தவருக்கு 7%, பழங்குடியினருக்கு 3% அளவுக்கும் மட்டும் தான் கல்விக்கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிகும் நியாயமல்ல.


பொதுப்பிரிவு மாணவர்கள் அனைவரும் உயர்சாதியினர் அல்ல. மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவில் இடம் கிடைத்து சேர்ந்தவர்கள் தான் பொதுப்பிரிவினர். அவர்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் இருக்கக்கூடும். ஆகவே, அவர்களுக்கு அதிக அளவில் கல்விக்கடன் வழங்கப்பட்டதில் எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினம்/ பழங்குடியினருக்கு மிகக்குறைந்த அளவில் கல்விக்கடன் வழங்கப்பட்டிருப்பது தான் சமூகநீதிக்கு எதிரான செயல் ஆகும்.


கல்விக்கடனுக்கான கடன் உத்தரவாத நிதியம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படை நோக்கமே ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களிடம் கல்விக்கடனுக்கு ஈடாக உத்தரவாதம் கொடுக்க எதுவும் இல்லை என்பதற்காக கடன் வாய்ப்பு மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான். ஆனால், பெரும்பான்மையான பொதுத்துறை வங்கிகளிடம் அத்தகைய பார்வை இல்லை என்பது தான் உண்மை. உயர்கல்வியில் பொதுப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கு மிகவும் எளிதாக வேலை கிடைத்து விடும்-அதனால் அவர்கள் கடனை விரைவாக செலுத்தி விடுவார்கள்; இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் உயர்கல்வி கற்றாலும் கூட அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்- அதனால் அவர்களால் குறித்த காலத்தில் கடனை செலுத்த முடியாமல் போகலாம் என்ற தவறான கற்பிதம் வங்கிகளிடம் உள்ளது. அதனால் கல்விக்கடன் வழங்குவதில் பொதுப்பிரிவினருக்கு அளிக்கும் முன்னுரிமையை இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு வங்கிகள் வழங்குவதில்லை. இந்தக் காரணத்தைக் கூறி பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் காட்ட முடியும்.


அதேபோல், கல்விக்கடனுக்கான கடன் உத்தரவாத நிதியத் திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் வரையிலான கல்விக்கடனுக்கு எந்தவித உத்தரவாதத்தையும் வங்கிகள் கோரக்கூடாது. ஆனால், ரூ. 4 லட்சத்துக்கும் கூடுதலான கல்விக் கட்டணத்திற்கு மூன்றாம் நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று வங்கிகள்  கட்டாயப்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, பொதுப்பிரிவினருக்கு ரூ.3.54 லட்சம் கடன் உச்சவரம்பு நிர்ணயித்துள்ள வங்கிகள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ.2.91 லட்சம் மட்டுமே கல்விக்கடன் தருகின்றன. ரூ.4 லட்சம் வரை கல்விக்கட்டணம் இருந்தால் முழுத் தொகையையும் கடனாக வழங்க வேண்டும்; கல்விக்கட்டணம் ரூ.4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அதில் 5 விழுக்காட்டை மாணவர் செலுத்த வேண்டும்; மீதமுள்ள தொகையை கடனாக வழங்க வேண்டும் என்பது தான் விதியாகும்.


இந்தியாவில் கல்விக்கட்டணம் என்பது பெரும்பாலும் ரூ.5 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ள நிலையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதில் சுமார் பாதியளவுக்கு மட்டும், அதாவது ரூ.2.91 லட்சம் மட்டுமே கடன் வழங்கப்படுவதால், மீதமுள்ள தொகையை ஏற்பாடு செய்ய முடியாமல் பல மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடும் அவலம் நீடிக்கிறது. பட்டியலினத்தவருக்கு ரூ.3.24 லட்சம், பழங்குடியினருக்கு  ரூ.3.17 லட்சம், பொதுப்பிரிவினருக்கு ரூ.3.54 லட்சம் என்ற அளவில் தான் கல்விக்கடன் கிடைப்பதால் அவர்களும் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் படிப்புகளை படிக்க முடியாத நிலை காணப்படுகிறது.


ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் உயர்கல்வி கற்க பெரும் தடையாக இருப்பது கல்விக்கட்டணம் தான். உயர்கல்விக்கான கட்டணம் லட்சக்கணக்கில் இருப்பதால் அதை ஏழை, நடுத்தர மாணவர்களால் செலுத்த முடியாது. அது தான் அடித்தட்டு மக்கள் உயர்கல்வி கற்பதற்கு பெரும் தடையாக இருந்தது. அந்த நிலையை மாற்றுவதற்காக கல்விக்கடன் அறிமுகம் செய்யப்பட்டது. அதிலும் கூட கல்விக்கடன் வழங்க வங்கிகள் சொத்துகளை ஈடாக கேட்டதால் கல்விக்கடனும் ஏழைகளுக்கு பயனளிக்கவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு வகையில் தான், உத்தரவாதம் இல்லாமல் கல்விக்கடன் வழங்குவதற்காக  கல்விக்கடனுக்கான கடன் உத்தரவாத நிதியத்தை மத்திய அரசு ஏற்படுத்தியது. அதன் மூலம் கடன் வழங்குவதிலேயே இவ்வளவு பாகுபாடு காட்டப்படுவது திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விட்டது.


எனவே, மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, உயர்கல்விக்கான கட்டணம் முழுவதையும்  உத்தரவாதமற்ற கடனாக வழங்கும் வகையில் இந்தத் திட்டத்தை திருத்த வேண்டும். அதுமட்டுமின்றி,  பொதுப்பிரிவு மாணவர்கள், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் என்ற பாகுபாடு இல்லாமல் உயர்கல்வி கற்க விரும்பும் அனைவருக்கும் கல்விக்கடன் வழங்கும்படி வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.