முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முருக பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, விழாவின் முக்கிய நிகழ்வான முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.


இரவில் ராக்கால அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவிலுக்கு சென்று சேர்ந்தார்.


விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.