பாராளுமன்றத் தேர்தலோடு 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.. "எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலோடு தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.


பேரவைத் தலைவரால் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அந்தத் தொகுதிகள் காலியாக உள்ளன. அது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட நிலையில் அந்தத் தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதுபோலவே திருவாரூர் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளும் நீண்ட நாட்களாக காலியாக உள்ளன. தற்போது ஓசூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பதவி இழந்துள்ள நிலையில் அந்தத் தொகுதியும் காலியாக உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள தொகுதிகளில் சுமார் 10% தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல்முறையாகும் . அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் அந்தத் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியின் ஆட்சி தொடர்வதற்கும் அதுவே காரணமாக இருக்கிறது.


காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்துவது தான் முறையானதாக இருக்கும். தனித்தனியே தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பொருள் செலவையும், கால விரயத்தையும் அது தடுக்கும். அதுமட்டுமின்றி இடைத்தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வது தான் என்ற கேவலமான நிலையையும் அது மாற்றும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலோடு காலியாக உள்ள இருபத்தொரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.