இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் வேட்டலம் ஜமீன் வளாகத்தில் திருடப்பட்ட மரகத லிங்கம் தற்போது அதே வளாகத்தில் குப்பையில் மீட்க்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வேட்டலம் ஜமீன் கோட்டை வளாகத்தில் உள்ள மனோன்மணியம்மன் கோவிலில் வளாகத்தில் இருந்த மரகத லிங்கம் மர்மமான முறையில் திருடப்பட்டது. 


அதிகாலை பூஜைகள் நடத்த கோவில் நடையைத் திறந்தபோது மரகத லிங்கம் திருடப்பட்டது தெரியவந்தது. கோவிலின் பின்பக்க சுவரைத் துளையிட்டு மரகத லிங்கத்தை யாரோ திருடிச் சென்றிருந்த நிலையில் சிலை திருட்டு குறித்த தகவல்கள் மர்மமாக இருந்தது. இந்த துணிகர திருட்டின் போது அம்மனின் ஒரு கிலோ வெள்ளி கிரீடம், வெள்ளி பாதம், தங்கத்தாலி போன்ற நகைகளும் திருடு போனது.


அதன் பின்னர் வேட்டலம் காவலர்கள் நடத்திய விசாரணையில் எந்தவிதமான தகவலும் கிடைக்காததால் இந்த வழக்கை பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதனையடுத்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜமீனில் பணிபுரியும் பணியாளர்கள், கோவில் நிர்வாகிகள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் தற்போது ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் லிங்கம் கிடந்ததாக ஜமீன் ஊழியர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். தகவல் கிடைத்ததும் அதிகாரிகள், ஜமீன் மகேந்திர பந்தாரியர், கோவில் குருக்கள் ஆகியோரிடம் விசாரித்தப் பிறகு இது திருடப்பட்ட மரகத லிங்கம்தான் என உறுதி செய்யப்பட்டது. 


இரண்டு ஆண்டுகளுக்குப் முன்பு தொலைந்து போன லிங்கத்தை யார் தற்போது அங்கே போட்டது என்பது குறித்து சிலைக் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த லிங்கம் இதற்கு முன்பே 1986-ஆம் ஆண்டு இதேபோல திருடப்பட்டு பின் ஒரு வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.