திருச்செந்தூர் கோயில் விபத்து: உயிரிழந்த குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வள்ளி குகையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். பிரகாரம் இடிந்ததால் கோயிலில் நடைபெறவிருந்த அனைத்து பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை:-
இன்று (14.12.2017), தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சுற்றுப்பிரகார மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில், மேற்கூரை கான்கிரிட் இடிந்து, அதன் கீழ் நின்று கொண்டிருந்த திரு. ரவி என்பவரின் மனைவி திருமதி பேச்சியம்மாள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
கோவில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, உயிரிந்த திருமதி பேச்சியம்மாள் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் திரு.கந்தசாமி மற்றும் திரு. செந்தில்ஆறுமுகம் ஆகிய இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியையும் அறிந்து வருத்தமடைந்தேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்த செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. சேவூர் ளு.ராமச்சந்திரன், திருமதி ஜெயா, இ.ஆ.ப, ஆணையர், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, மற்றும் மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இது போன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் ஏற்படா வண்ணம், தமிழ்நாட்டிலுள்ள திருக்கோவில்களின் கட்டட ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய உடனடியாக களஆய்வு மேற்கொள்ளவும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் அவர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாயும்; காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் திருக்கோயில் நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.