சென்னை: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு ஜனவரி 13 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நெல்லை கண்ணனுக்கு (Nellai Kannan) சில நிபந்தனைகளுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக., நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அண்மையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்டோருடன் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.


இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா-விற்கு எதிராக வன்முறை தூண்டும் விதமாக பேசியதாக மேலப்பாளையம் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.  இதனையடுத்து அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். 


இதனிடையே, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து  சர்ச்சைக்குரிய வகையில் நெல்லை கண்ணன் பேசியதாக கூறி அவரை சிறையில் அடைக்க வேண்டும் என பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மெரினாவில் தமிழக பாஜக-வினர் நடத்திய போராட்டத்தினை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் தடுப்பு காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். போராட்டங்கள் அதிகரிக்க நேற்றைய தினம் நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டார்.


இதனையடுத்து நெல்லை கண்ணன் நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைதான நெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13 வரை நீதிமன்ற காவல் விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்தநிலையில், நேற்று தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மாநாட்டில் தான் பேசியது தவறாக புரிந்துக்கொண்டதாகவும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா சோலியை முடிக்க வேண்டும் என்று பேசியது, அவர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் பேசினேன். யாருடைய உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் பேசவில்லை. எனவே தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.


இதனையடுத்து இன்று நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைதான நெல்லை கண்ணனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.