TN Assembly Elections 2021: 60 கேட்கும் பாஜக, 21-ல் நிற்கும் அதிமுக, தொடரும் பேச்சுவார்த்தை
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சந்தித்து தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதித்தார்.
சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சந்தித்து தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதித்தார். அதிமுக உடன் கூட்டாக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது.
இரவு 10 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்தன. பாஜக தாங்கள் வெல்லக்கூடிய தொகுதிகளாக மொத்தம் 60 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. இந்த 60 இடங்களையும் தங்கள் கட்சிக்கு ஒதுகக் வேண்டும் என பாஜக கேட்டுள்ளதாகவும், அவ்வளவு தொகுதிகளை அளிக்க அதிமுக-வுக்கு இஷ்டமில்லை எனவும் வட்டாரங்காள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக-வின் இருப்பு முன்னேறியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. எனினும், தற்போது நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் (TN Assembly Elections) அதிமுக-வுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, இந்த முன்னேற்றத்தைக் காட்டி தொகுதிகளை பெற முடியுமா என்பது பெரிய கேள்வியாகத்தான் உள்ளது. அதிமுக பாஜக-வுக்கு 21 இடங்களை தரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான், அதிமுக, பாமக உடனான தனது தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடித்தது. அதிமுக பாமக-வுக்கு சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளை வழங்கியுள்ளது.
தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. முன்னதாக, பழம்பெரும் மொழியான தமிழ் மொழியை தான் கற்கவில்லையே என்று பிரதமர் வருத்தம் தெரிவித்த அதே நாளில் அமித் ஷாவும் தமிழ் மொழியை வெகுவாகப் புகழ்ந்து தமிழ் ஒரு இனிமையான மொழி என்று கூறினார்.
இதனையடுத்து, காரைக்காலிலும் விழுப்புரத்திலும் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமித் ஷா (Amit Shah), தான் தமிழிலேயே பேச முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும், தன்னால் தமிழில் பேச முடியாதது குறித்து தான் வருந்துவதாகவும் மக்களிடம் கூறினார்.
"முதலில், நாட்டின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றான இனிமையான தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்" என்று விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் ஷா கூறினார். "மிகப்பெரிய தமிழ் கலாச்சாரம் இல்லாமல், இந்தியாவின் கலாச்சாரம் முழுமையடையாது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, அபர்ணா ரெட்டி என்பவர் தன்னிடம், முதலமைச்சராகவும், பிரதமராகவும் இருந்த இந்த நீண்ட ஆண்டுகளில் அவர் எதையேனும் தவறவிட்டதாக நினைக்கிறாரா என்று கேட்டார் என்று தெரிவித்தார்.
"நான் அந்த கேள்வியைப் பற்றி யோசித்தேன். உலகின் பழமையான மொழியான தமிழை என்னால் கற்க முடியவில்லை என்பதில் எனக்கு ஒரு வருத்தம் உள்ளது என்பதை அப்போது நான் உணர்ந்தென். தமிழ் ஒரு அழகான மற்றும் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் மொழியாகும். தமிழ் இலக்கியத்தின் குணங்கள் மற்றும் தமிழ் கவிதைகளின் ஆழம் பற்றி பலர் என்னிடம் கூறியுள்ளார்கள்” என்று பிரதமர் கூறினார்.
ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும். தமிழ்நாட்டில் பதினைந்தாவது சட்டமன்றத்தின் காலம் 2021 மே 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 6,28,23,749 வாக்காளர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் பதினாறாவது சட்டமன்றத்திற்கு வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள்.
ALSO READ: TN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR