கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை முதல்வர் வெளியிட்டார்
கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 29.9.2015-ஆம் நாளன்று தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-இன் கீழ் 'தமிழ் மொழிக்கும் கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பின் அடிப்படையிலும் திருக்குறளைக் கொரிய மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற கொரிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், உலகப் பொதுமறையான திருக்குறளைக் கொரிய மொழியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக மொழிபெயர்த்து வெளியிடப்படும். இதற்கென ரூ.36 லட்சம் ஒதுக்கீடுசெய்யப்படும்' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஜெயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்ட திருக்குறள் நூலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட, சென்னையில் உள்ள தென் கொரியத் தூதரகத்தின் தூதர் ஹங் டே கிம் பெற்றுக் கொண்டார்.