இன்று ஜல்லிக்கட்டு முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைக்கிறார்!!
மதுரையில் இன்று நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று மாலை மதுரைக்கு பயணம் மேற்கொண்டார்.
ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நீடித்த தடை, தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தால் நேற்று உடைந்தது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கி இந்த ஆண்டு போட்டிகள் நடைபெறும் என்று தமிழக மக்கள் மிகுந்த ஆவலோடு இருந்தனர். ஆனால் இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும், இந்த தடைக்கு காரணமான விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’வை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்ட களத்தில் குதித்தனர். அறவழியில் நடந்த போராட்டத்தால் கடந்த சில நாட்களாக தமிழகமே ஸ்தம்பித்தது.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறுநாள் பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு மோடி, ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த அறிக்கைக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், தமிழக அரசு சட்டரீதியாக எடுத்திடும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு மாநில அளவில் திருத்தம் ஒன்றை கொண்டு வந்து, அந்த சட்ட திருத்தத்தை அவசர சட்டமாக பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தயாரிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் மாலை ஒப்புதல் அளித்தது.
அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும் ஒப்புதல் அளித்தனர்.
இதனையடுத்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டிகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதால் மதுரை விழாகோளம் பூண்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் மற்ற பகுதிகளில் அந்தந்த மாவட்டங்களை சார்ந்த அமைச்சர்கள் காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பார்கள்.
மதுரை அவனியாபுரத்தில் 25-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.