தமிழகத்தில் 3 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில், புதிதாக 13 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் வழங்குமாறு, மத்திய அரசை, மாநில அரசு கேட்டுக்கொண்டிருந்தது. இதனை பரிசீலித்த, மத்திய அரசு, கடந்த அக்டோபர் மாதம் ஒரே நேரத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மக்கள் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறைக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில், தலா 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி மொத்தமுள்ள 975 கோடி ரூபாயில், மத்திய அரசின் பங்காக 585 கோடி ரூபாயும், மாநில அரசின் பங்காக 390 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்படும். இதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஒரே நேரத்தில் 3 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, நன்றித் தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.


ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு, மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவது என்பது வரலாற்றுச் சாதனை என்றும், முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கென, மொத்தமுள்ள 2 ஆயிரத்து 925 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தனது பங்கான ஆயிரத்து 755 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.