கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு.....
கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினருடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஆலோசனை.....
கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினருடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஆலோசனை.....
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
டெல்லியில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண நிதியாக தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழுவினர் சென்னை வந்தடைந்தனர்.
அந்தக் குழுவில் நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண் துறை இயக்குனர் ஸ்ரீவத்சவா, ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் மாணிக் சந்திர பண்டிட், மின்துறை தலைமைப் பொறியாளர் வந்தனா சிங்கால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் இந்தக் குழுவுடன் சென்னையில் உள்ள நீர்வளத்துறை அதிகாரி ஹர்ஷா, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியியல் மேற்பார்வையாளர் இளவரசன் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த குழுவினர் நேற்று இரவு 8 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தனர். இன்று காலை 10.15 மணியளவில் சென்னை தலைமை செயலகத்துக்கு குழுவினர் வருகின்றனர். 10.30 மணிக்கு அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுகின்றனர். பின்னர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்த சந்திப்பின்போது வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வருவாய் துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட முக்கிய அரசு துறைகளின் செயலாளர்கள் மத்திய குழுவினருடன் ஆலோசனை செய்வார்கள்.
அதன் பிறகு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய குழுவினர் திருச்சிக்கு செல்கின்றனர். பின்னர் புயல் பாதிப்பு பகுதிகளுக்கு சென்று அவர்கள் ஆய்வு செய்ய இருக்கின்றனர்.