தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக திருநாவுக்கரசர்
தமிழ் நாடு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பு ஏற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை இளங்கோவன் சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
புதிய தலைவர் நியமிப்பதில் தாமதம் ஆனதால் தலைமை இல்லாமல், 4 மாதங்களாக கட்சி செயல்பட்டு வந்தது. விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என தொண்டர்கள் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர்.
புதிய தலைவர் பதவிக்கு சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் என பலரது பெயர்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளதாக டில்லியில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி அறிவித்துள்ளார்.
தன்னை தலைவராக நியமித்ததற்கு சோனியாவுக்கும், ராகுலுக்கும் திருநாவுக்கரசர் நன்றி தெரிவித்துள்ளார்.
திருநாவுக்கரசருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இளங்கோவன், கட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார்.