குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி சடலமாக மீட்கப்பட்ட நிலையில்.,  பயன் இல்லாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 5 நாள் போராட்டத்திற்கு பின் உடல் மட்டும் மீட்கப்பட்ட நிலையில், பயன் இல்லாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவையடுத்து தமிழ்நாடு குடிநீர் வாரியம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.



இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு குடிநீர் மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் பயன்பாட்டில் இல்லாதா ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி  கிணறுகளை 24 மணிநேரத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்றவேண்டும் என வாரிய பொறியாளர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மேலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆழ்துளை கிணற்றை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றுவது தொடர்பாக சந்தேகம் இருந்தால் twadboardtn.gov.in என்ற இணையத்தளத்திலோ, 9445802145 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக., திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தார். ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழதையை மீட்க, அன்று முதல் இன்று அதிகாலை வரை இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமார் 82 மணி நேர போராட்டத்திற்கு பின்பு, இன்று அதிகாலை 4 மணி அளவில் குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.


இதனையடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர்கள், மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.