முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை முன்னேறி வரும்வரை அவர் கவனித்த இலாகாக்கள் ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார் என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று ஆளுநர் மாளிகை அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறியதாவது:- இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 166, உட்பிரிவு 3-ன்படி, முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள் அனைத்தும் நிதி, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒதுக்கப் பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டங்களுக்கு இனி நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகிப்பார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின்படி, அவர் மீண்டும் தனது பணிகளை கவனிக்கும் வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பதவியில் ஜெயலலிதாவே நீடிப்பார்.


முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது. லண்டனைச் சேர்ந்த சிறப்பு டாக்டர் ரிச்சர்ட் பீலே கடந்த 30-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அவரது ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையிலிருந்து சிறப்பு டாக்டர்கள் குழுவினர் கடந்த 5-ம் தேதி அப்பல்லோ வந்தனர். அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் பற்றி ஆராய்ந்தார்கள்.


இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பதால், அவரின் பொறுப்புகளை துணை முதலைமைச்சர் நியமிக்க வேண்டும் என என கருணாநிதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக நலன் கருதி திமுக வலியுறுத்திய கருத்தையொட்டி முதல்வரின் பொறுப்புகளை நிதியமைச்சர் கவனிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.