டெங்கு பாதிப்பு குறித்த உண்மைகளை வெளியிடக் கூடாது என தனியார் மருத்துவமனைகள் அச்சுறுத்தப்படுகின்றன என திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17-10-2017) சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். 


பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- 


எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட பலவித காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய தாய்மார்கள், குழந்தைகளை எல்லாம் நேரில் சந்தித்து, மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை கள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். 


எழும்பூர் மருத்துவமனையில் மட்டும் 56 குழந்தைகள் பலவித காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர் களில் 26 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.


அதேபோல, இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள 39 கர்ப்பிணித் தாய்மார்களில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
எனவே, தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இன்றைக்கு இது ஒரு டெங்கு மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் முன்கூட்டியே டெங்கு பாதிப்பு களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால், இந்தளவுக்கு மோசமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. 


இந்த நிலையில், டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசினால் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆய்வறிக்கையை வெளியிடுகின்றபோது, “டெங்கு காய்ச்சல் என்பது ஒரு சாதாரண விஷயம். இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாநில அரசோ, மத்திய அரசோ பொறுப்பேற்க முடியாது”, என்று அலட்சியமாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.


அதைவிட கொடுமை என்னவென்றால், டெங்கு காய்ச்சலால் இதுவரை வெறும் 40 பேர் தான் இறந்துள்ளனர் என்ற ஒரு தவறான, டெங்குவால் நூற்றுக் கணக்கானோர் இறந்துள்ள நிலையில், அவர்களை எல்லாம் கொச்சைப்படுத் தும் வகையில் ஒரு அறிக்கையை தந்திருப்பது உண்மையில் வேதனைக்குரியது. 
அதுமட்டுமல்ல, டெங்குவால் பாதிக்கப்பட்ட பலபேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அங்கும் இறந்து போயுள்ளனர். ஆனால், அப்படி இறந்தவர்கள் டெங்குவால் இறந்தார்கள் என்று சான்று கொடுக்கக் கூடாது என்று அந்த மருத்துவமனைகள் கட்டாயப்படுத்தப் படுகின்றன. 


அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்மொழி உத்தரவு என்னவென்றால், “டெங்கு காய்ச்சலால் யாராவது இறந்ததாக செய்தியை வெளியிட்டால், உங்களுடைய மருத்துவமனையின் அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்படும்”, என்று அச்சுறுத்தி, மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


இப்படி டெங்கு காய்ச்சலினால் நூற்றுக்கணக்கானோர் ஒருபக்கம் இறந்து கொண்டிருக்கும் போது, இதுபற்றியெல்லாம் ஆளும்கட்சி கவலைப்படாமல், ஆடம்பரமான கட்-அவுட்டுகள் வைத்து விழாக்கள் கொண்டாடும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவர் கூட டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை என்று மூத்த அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் அறிக்கை வெளியிட்டு, பேட்டியும் தந்திருக்கிறார்.


ஆனால், திண்டுக்கல் பழனி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் சில குழந்தைகள் இறந்திருப்பதாக சான்றுகள் அளிக்கப்பட்டு, அதற்கான ஆதாரங் கள் என்னுடைய கையில் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, அதே மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 15 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த யமுனா என்ற 7 வயது குழந்தை 16 ஆம் தேதியன்று இறந்து போனது. அதற்கான சான்று கையில் உள்ளது. ஆனால், டெங்கு காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை என்ற தவறான ஒரு தகவலை, திட்டமிட்டு இந்த அரசு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.


எனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியை முறையாக அரசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என மு.க ஸ்டாலின் கூறினார்.