நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி-யாக இருந்த விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் டிஎஸ்பி-யாக இருந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த ஆண்டு (2015 செப்டம்பர்) அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார். விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால்தான் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது தோழி கூறியிருந்தார். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது.இந்நிலையில் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே தனது மகள் இறந்திருக்கிறார் என்று அவரது தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷ்ணுபிரியா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.


இந்நிலையில், நீதிபதிகள் குலுவாடி, ரமேஷ், முரளிதரன் அடங்கிய அமர்வு விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.