உள்ளாட்சி தேர்தல்: நோட்டா சின்னத்துக்கு வாய்ப்பில்லை
உள்ளாட்சி தேர்தலில் நோட்டா சி்ன்னத்துக்கு வாய்ப்பில்லை என மதுரை ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் நோட்டா சி்ன்னத்துக்கு வாய்ப்பில்லை என மதுரை ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9-ஆம் தேதி துவங்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் டிசம்பர் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வேட்பு மனு தாக்கல் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவியிடங்களுக்கு 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
அந்தவகையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா லட்சுமிபுரத்தை சேர்ந்த வினோத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஊராட்சி பதவிகளுக்கான இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் ‘நோட்டா’ சின்னத்துக்கு வாக்களிக்கும்படி ஏற்பாடு செய்யப்படவில்லை. ஒவ்வொரு பதவியிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க சிலர் விரும்பமாட்டார்கள். அவர்கள் நோட்டாவை தேர்ந்தெடுத்து வாக்களிக்கவே விரும்புவார்கள். உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை.
எனவே உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவை தேர்ந்தெடுத்து வாக்களிக்கும் உரிமையை வழங்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியம் எந்த பதிலும் இல்லை. எனவே நோட்டாவை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த தேர்தல் நடவடிக்கைகளில் பெரும்பகுதி முடிந்துவிட்டது. எனவே இந்த தேர்தலில் நோட்டா சின்னத்துக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்வதற்கு வாய்ப்பில்லை என்றார்.
மேலும் விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்த பதில் மனுவை மாநில தேர்தல் ஆணையம் 8 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.