இது ஒரு மந்திரிக்கு அழகா? இப்படி எல்லாம் பொய் சொல்லலாமா.. -அமைச்சர் துரைமுருகன்
TN Minister Duraimurugan: கோவில்களில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பான செய்தி. மத்திய அமைச்சர் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை கூறக்கூடாது. இது மந்திரிக்கு அழகு அல்ல. பொன்னை ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் -தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
Tamil Nadu News: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பேருந்து நிலையத்தில் பொன்னையில் இருந்து சென்னை வரை செல்லும் புதிய பேருந்து இயக்க துவக்க நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பேருந்து இயக்கத்தினை துவக்கி வைத்தார். இதில் காட்பாடி ஒன்றிய பெருங்குழு தலைவர் வேல்முருகன், உள்ளிட்ட திமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆறுகளில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும் என எச்சரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அமைச்சர்கள் உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பக்கூடாது. இது மந்திரிக்கு அழகு அல்ல எனவும் கூறினார்.
கிரிமினல் வழக்கு பாயும்
பொன்னை ஆற்றில் இருந்து சுகாதார முறையில் தண்ணீர் கொடுக்க நான் முயற்சி செய்து வருகின்றேன். நான் தண்ணீர் கொடுக்கும் ஆற்றில் குப்பைகள் கொட்டி வருகிறீர்கள். இது என் கவனத்திற்கு வந்துள்ளது. நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், காலாவதியான கல்குவாரியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் கணக்கெடுத்துக் கொண்டுள்ளோம் என்றார்.
தடுப்பணைகளுக்கான டெண்டர் முடிந்து விட்டது. விரைவில் பணிகள் துவங்கப்படும். மேலரசம்பட்டு தடுப்பணை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது ஆய்வு முடிந்து அறிக்கை வந்தவுடன் அந்தப் பணிகளும் துவங்கும் எனக் கூறினார்.
பொன்னை பேரூராட்சியாக உருவாக்கப்படுமா என்ற கேள்விக்கு, விரைவில் பொன்னை பேரூராட்சியாக உருவாக்கப்படும். இது என் கவனத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க - ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
இது மந்திரிக்கு அழகு அல்ல
இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டுள்ளது தமிழகத்தில் கோவில்களில் பூஜை செய்ய தமிழக அரசும் திமுகவும் தடை விதித்துள்ளதாக மத்திய அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளது குறித்த பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது, "மத்திய அமைச்சர் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை கூறக்கூடாது. இது மந்திரிக்கு அழகு அல்ல" எனக் கூறினார்.
வதந்தி, சர்ச்சை..
முன்னதாக, எந்த அனுமதியும் பெறாமல் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ராமர் கோயில் திறப்பு விழாவை எல்இடி திரை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன் அனுமதி பெறாததால் எல்இடி திரையை காவல்துறையினர் அகற்றினர். இதை பெரும் சர்ச்சையாக பாஜகவினர் மாற்றினார். அதன் பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக அந்த கோயிலுக்கு நேரில் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது, "அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தமிழகத்தில் கோவில்களை திமுக அரசு தவறாக பயன்படுத்துகிறது என்றார்.
மேலும் படிக்க - தமிழக கோவில்களில் அடக்குமுறையா? ஆளுநர் ரவி, நிர்மலா சீதாரமன் சொல்வது என்ன?
ஒவ்வொரு இந்துக்கும் உரிமை உண்டு
இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடுகிறது. கோவில்களில் வழிபாடு செய்ய ஒவ்வொரு இந்துக்கும் உரிமை உண்டு. பிரதமர் பங்கேற்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் அனைவரும் பார்க்க விரும்புவார்கள். பிரதமர் மீதான தனிப்பட்ட வெறுப்பை காரணம் காட்டி பக்தர்களை வஞ்சிக்கிறார்கள். இந்துக்கள் உரிமையும், எனது உரிமையும் பறிக்கப்படுகிறது. திமுக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது" என குற்றம்சாட்டினார்.
காவல் துறை விளக்கம்
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை கொடுத்துள்ள விளக்கத்தில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் எல்இடி திரை வைக்க அனுமதி கோரவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பஜனை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும் எனக்கூறி அனுமதி கோரப்பட்டிருந்தது. அதுத்தவிர, நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும் படிக்க - காஞ்சிபுரம்: எல்இடி திரை வைக்க அனுமதியே கேட்கவில்லை - காவல்துறை விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ