மதுரை: தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் மதுபானம் விற்பனை செய்யும் டாஸ்மாக் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசின் அறிவிப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கும் போது, தமிழகத்தில் திறக்காமல் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் டாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியது, கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காகவும், மது குடிப்பவர்கள் சிரமம் படாமல் இருக்கவும், அதேநேரத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இது அரசு தானாகவே எடுத்த முடிவு  இல்லை எனக்கூறினார்.


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வந்ததால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை போடப்பட்டது. பின்னர் இரண்டாவது முறையாக மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், மூன்றாவது முறையாக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 


முதல் இரண்டு முறை போடப்பட்ட ஊரடங்கு உத்தரவில் எந்தவித தளர்வும் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த முறை சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில் குறிப்பாக மதுபானக்கடைகளை திறக்க அனுமதில் அளித்தது. 


மத்திய அரசின் அனுமதியை அடுத்து, பல மாநிலங்களில் நேற்று முதல் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன . இதனைதொடர்ந்து தமிழகத்திலும் மதுபானக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுதொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது.


அதில், "அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மதுபானக் கடைகளை இயக்க உத்தரவிட்டுள்ளதால், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் அண்டை மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளுக்குச் செல்கின்றனர். அத்தகையவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் நிறைய சிரமங்கள் எதிர்கொள்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மே 7 முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது." என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதேவேளையில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று மாநில அரசு தெளிவுபடுத்தியது.


மதுபானக்கடைகள் பின்வரும் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும்: 


- கடைகளில் அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சேர்ப்பது அனுமதிக்கப்படக்கூடாது.
- வரிசையில் உள்ள நபர்களிடையே ஆறு அடி தூரத்தை பராமரிக்க வேண்டும்.
- ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் வரிசையில் நிற்க அனுமதி கிடையாது.
- அனைத்து கடைகளிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
- இந்த கடைகளில் கூட்டம் வராமல் இருக்க கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.