வைகை அணையில் தெர்மோகோல் மிதக்கவிட்டதால் எனக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மோகோல்களை செல்லோடேப் மூலம் ஒட்டி மிதக்க விட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ. ஆனால் சற்று நேரத்திலே அனைத்து தெர்மோகோல்களும் காற்றில் அடித்து கரைக்கு ஒதுங்கியது. 


 இதனையடுத்து அமைச்சரும், அவரின் இந்த தெர்மோகோல் திட்டம் சமூக வலைத்தளங்களில் கடுமையான கிண்டலுக்கும் கேலிக்கும் ஆனது. அவரின் தெர்மோகோல் மிதக்கவிடும் திட்டம் விமர்சிக்கப்பட்டது. 


இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் இது குறித்து செய்தியாளர்கள் பேசியதாவது:-


தெர்மோகோல் திட்டத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்களே என கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர், 


தெர்மோகோல் திட்டத்துக்காக சமூக வலைத் தளங்களில் எனக்கு பாராட்டும் கிடைத்துள்ளது. விமர்சனமும் கிடைத்துள்ளது. அது நானாக சுயமாக எடுத்த நவடிக்கை இல்லை. அதிகாரிகளின் உரிய ஆலோசனைகள் பெற்றபிறகே எடுக்கப்பட்ட நவடிக்கை அது. தெர்மோகோல் திட்டம், நீர் ஆவியாவதைத் தடுக்க ஏற்கெனவே உலக நாடுகளில் உள்ள நடைமுறைத்திட்டம் தான்.


தெர்மோகோல் திட்டத்துக்கு சமூக வலைதளங்களில் விமர்சனம் வருவது போல, எனக்கு பலரும் இந்த திட்டத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


 இது போன்ற திட்டத்திற்கு இந்த தெர்மோகோல் திட்டம் முன்னோடியாக இருக்கிறது என என்னை பாராட்டுகின்றனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.