வியக்கும் அளவுக்கு ஆர்.கே.நகரை மாற்றிக் காட்டுவேன் - முதல்வர் ஜெயலலிதா
சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் என ஆர்.கே.நகர் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றி பட்டார். தொடர்ச்சியாக 2-வது முறை ஆட்சியையும் பிடித்தார் முதல்வர் ஜெயலலிதா.
இந்நிலையில் நேற்று ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரச்சார வாகனம் மூலம் போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்டார்.
முதல்வர் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் எனக்கு இந்த தொகுதியில் மகத்தான வெற்றியை வழங்கியதற்காக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். தொடர்ச்சியாக 2-வது முறை ஆர்.கே.நகர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக என்னை தேர்வு செய்ததற்கும் நன்றி கூறுகிறேன். ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களாகிய நீங்கள் என் நெஞ்சில் நீங்காத இடத்தை பெற்றுள்ளீர்கள். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது. கடந்தாண்டு இடைத்தேர்தலில் என்னை உங்கள் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள். என் சக்திக்கு உட்பட்ட வரை இந்த தொகுதிக்கு கடந்த ஒரு வருடமாக பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.
இந்த தொகுதியில் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்திலேயே ஆர்.கே. நகர் தொகுதிதான் முன்மாதிரியான தொகுதி என்று அனைவரும் வியக்கும் அளவுக்கு மாற்றிக் காட்டுவேன். நீ்ங்கள் என் மீது பொழியும் அன்பையும், வரவேற்பையும் பார்க்கும் போது என் நெஞ்சம் நெகிழ்கிறது என்று அவர் பேசினார்.