ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது அனைவரும் அறிந்ததே. மேலும் இது தொடர்பான வழக்கினை வரும் அக்., 31-ம் தேதிக்குள் முடிவுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்னதாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பான ஆவணங்களை அதிமுக-வின் இரு அணியினரும் கடந்த மாதம் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.


இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய அணியினரும், டிடிவி அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.


அதேவேளையில், தினகரன் அணியினர் தங்கள் தரப்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முன்னதாக கோரிக்கை வைத்தது. 


ஆனால், தினகரன் அணிக்கு அவகாசம் அளிக்க முடியாது எனவும், இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்றும், நேற்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


இந்நிலையில், இன்று (வெள்ளி) பிற்பகல் 3 மணியளவில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை, டெல்லி தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நடக்கவுள்ளது. 


தலைமை தேர்தல் கமிஷ்னர் ஏ.கே.ஜோதி மற்றும் இரு தேர்தல் கமிஷனர்கள் அடங்கிய முழு அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெறும். 


இந்த விசாரணையில் இரு அணிகள் சார்பிலும் நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டு தங்கள் தரப்பிலான வாதத்தை முன்வைப்பார்கள்.