தமிழகத்தில் இன்று பொது வேலை நிறுத்தம்
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேண்டுகோளை ஏற்று திமுக, காங்கிரஸ், ஓ பன்னீர்செல்வம் அணி, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் சுமார் 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 21 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்தும், சவம் போல் சாலையில் படுத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டியும் பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பிற மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், திமு.க., எம்.பி., கனிமொழி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை காத்திடவும், அவர்களது பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஏற்கெனவே தமிழ்நாடு விவசாயிகள் கூட்டியக்கம் அறிவித்தது.
அதன் படி இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று போது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.