நாளை திமுக செயற்குழு கூட்டம்: ஸ்டாலினுக்கான சவால்கள் என்ன?
நாளை திமுக செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. திமுக-வில் நிலவும் சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற கேள்வி தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து 11 நாளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 7 ஆம் நாள் மாலை 6.10 மணியளவில் கலைஞர் காலமானார். அவரது மறைவை தாங்க முடியாமல் திமுக தொண்டர்கள் கண்ணீருடன் தலைவா எழுத்து வா... தலைவா எழுத்து வா... என்று கோசம் இட்ட நிலையில் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அடுத்த நாள் ஆகஸ்ட் 8 அன்று மாலை சுமார் 4 மணியளவில் சாலையின் இருபுறமும் திமுக தொண்டர்கள் படை சூழ கருணாநிதியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அண்ணாவின் பக்கத்தில் இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 9 ஆம் நாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக-வின் முக்கிய தலைவர்கள் இருந்தனர். வரும் ஆகஸ்ட் 14 ஆம் நாள் திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தில், திமுக தலைவர் யார்? என்பது போன்ற முக்கிய முடிவுகள் பல எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மூத்த மகன் மு.க. அழகிரி அவர்கள் தனது குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம், என் அப்பாவிடன் என் ஆதங்கத்தை தெரிவித்திருக்கின்றேன். அது தற்போது மக்களுக்கு தெரியாது, காலம் வரும்போது மக்களுக்கு தெரியவரும். எனது ஆதங்கம் கட்சி தொடர்பானதாக தான் இருக்கும். தலைவர் கலைஞரின் உன்மையான, விசுவாசமான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். அனைவரும் என்னை ஆதரித்துக்கொண்டு இருக்கின்றனர். கட்சி தொடர்பான என் ஆதங்கத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும். நான் தற்போது திமுக-வில் இல்லை., எனவே செயற்குழு பற்றி எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலினுக்கும், மு.க.அழகிரிக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விசியம்.ஏற்கனவே திமுகவின் தென் மண்டல செயலாளராகவும், மத்திய அமைச்சராகவும் மு. க. அழகிரி இருந்துள்ளார். ஆனால் அவரின் செயல்பாடுகள் திமுக-விற்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி திமுக-வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மு. க. அழகிரியை, அப்போதைய திமுக-வின் தலைவர் கருணாநிதி நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.க. அழகிரி ஒரு பக்கம் இப்படி கூறியுள்ள நிலையில், செயல் தலைவராக உள்ள ஸ்டாலினை, திமுக தலைவராக்க வேண்டும் என கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நாளை திமுக செயற்குழு நடைபெற உள்ளது. இந்த சவால்களை சமாளித்து திமுக-வை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வாரா? என்ற கேள்வி தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் எழுந்துள்ளது.