பணிக்கு வர மறுத்த தொழிலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை நோட்டீஸ்!
பணிக்கு செல்லாமல் 3வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி விளக்கம் கேட்டு போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர். நேற்று மாலை தொடங்கிய இவ்வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மூலம் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று தெரிவித்திருந்தார்
இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்தும், ஓட்டுநர், நடத்துநர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. மேலும் பணிக்கு திரும்பாதவர்கள் மீது பணி நீக்கம், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து தமிழக அரசும் போக்குவரத்து ஊழியர்களை பணிக்கு திரும்பும்படி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அரசு மற்றும் நீதிமன்றத்தின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள், கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தது.
இந்நிலையில், பணிக்குவராத ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி பணிக்கு திரும்பாத ஊழியர்களிடம் விளக்கம் கேட்டும், நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.