திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் உடைந்த 9 மதகுகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் காவிரியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேல் அணையில் நேற்று முன்தினம் இரவு 8 மதகுகளும், நேற்று காலை ஒரு மதகும் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தன. சேதமடைந்த மேல் அணையை பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகரன் மற்றும் முதலமைச்சரின் தனிச்செயலர் சாய்குமார் நேற்று ஆய்வு செய்தனர்.


இந்நிலையில் இன்று முக்கொம்பு மேல் அணையில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதல்வருடன் அமைச்சர்கள்  காமராஜ், துரைகண்னு, வெல்லமண்டி நடராஜன், வளர்மதியும் ஆய்வு செய்தனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறுகையில்., திருச்சி முக்கொம்பில் மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதிக அளவில் வெள்ள நீர் வெளியேறியதால் அழுத்தம் காரணமாக பழமையான அணையின் மதகு உடைந்தது.


முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்ததிற்கும் மணல் அள்ளியதற்கும் எந்த தொடர்பும் இல்லை; மேலணையில் இருந்து வெகுதொலைவில் உள்ள குவாரியில்தான் மணல் அள்ளப்படுகிறது.


திருச்சி முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணி 4 நாட்களில் முடியும். மதகுகள் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடி செலவில் புதிய கதவணை கட்டப்படும் என்றும் கொள்ளிடத்தின் வடக்குப்பகுதியில் உள்ள அய்யன்வாய்க்காலிலும் ரூ.85 கோடியில் கதவணை கட்டப்படும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 


மேலும், புதிய கதவணைகள் பணி விரைவில் தொடங்கி 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்..!