தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி ரத்து... அண்ணாமலை கூறியது வதந்தி - உண்மை என்ன?
Thanjavur Natyanjali Ceremony: தஞ்சாவூரில் நாட்டியாஞ்சலி விழா இந்தாண்டு நடைபெறாததற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் என அண்ணாமலை கூறிய நிலையில், அத்தகவல் வதந்தி என தமிழக அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
Thanjavur Natyanjali Ceremony Issue: ஆண்டுதோறும் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு கடந்த மார்ச் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திர விழா கொண்டாடப்பட்டது. அதாவது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை சிவாலயங்களில் சிவராத்திரி சார்ந்த பூஜைகள் நடைபெறும்.
அந்த வகையில், சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம், தஞ்சாவூர் உள்ளிட்ட சிவலாயங்களில் பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி விழா நடைபெறும். இதில், தஞ்சாவூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பரதநாட்டிய விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் வெளியில் அறிவிக்கப்படாத நிலையில், இதனை தமிழ்நாடு அரசுதான் ரத்து செய்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் நேற்றைய பதிவு
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அவரது அதிகாரப்பூர்வ X தளத்தில், "தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழா என்பது, சிதம்பரம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஆலயங்களில், பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம், கதக் உள்ளிட்ட பல்வேறு நாட்டியக் கலைஞர்கள் பங்குபெறும் சிவராத்திரி தினத்தையொட்டிய நாட்டியப் பெருவிழா ஆகும்.
மேலும் படிக்க | ஜாபர் சாதிக் விவகாரம்: களத்தில் இறங்கியது அமலாக்கத்துறை - சிக்கப்போவது யார்?
கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த விழாவில், உலகெங்கும் உள்ள நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று, தஞ்சைப் பெருவுடையாருக்கும், மாமன்னர் ராஜராஜ சோழனுக்கும் தங்கள் நடனத் திறனால் மரியாதை செய்வது மரபு.
'இந்து மத விரோதம்'
இந்த ஆண்டு, நேற்றைய தினம் நடைபெற இருந்த நாட்டியாஞ்சலி விழாவுக்கு, இந்து மத விரோத திமுக அரசு அனுமதி மறுத்ததால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆலய நடைமுறைகளிலும், இந்து மத நம்பிக்கையிலும் தொடர்ந்து தலையிட்டு வரும் திமுக, தற்போது ஒரு படி மேலாக, தஞ்சை பெருவுடையார் கோவில் நிகழ்வுகளிலும் தலையிட்டு, மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டாண்டு காலமாக நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவுக்கும் அனுமதி மறுத்திருப்பது, திமுகவின் இந்து மத வெறுப்பைக் காட்டுவதோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பெருமைக்குரிய அடையாளமான தஞ்சாவூர் பெரிய கோவிலையும் அவமானப்படுத்தும் நோக்கத்தையும் காட்டியிருக்கிறது.
உடனடியாக, தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவை, ஒவ்வொரு ஆண்டையும் போல, ஆலய வளாகத்திலேயே நடைபெற அனுமதிக்க வேண்டும் என்றும், திமுகவின் இந்து மத விரோதப் போக்கை, உலகெங்கும் இருந்து, தஞ்சாவூர் வந்து, பெருவுடையார் கோவில் வளாகத்தில் தங்கள் நடனத் திறன் மூலம் மரியாதை செலுத்த வந்திருக்கும் நடனக் கலைஞர்களிடத்தும், பக்தர்களிடத்தும், தங்கள் அராஜகப் போக்கினைக் காட்ட முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க | பாஜகவில் இணைந்த ஓய்வு பெற்ற காவல் துறையினர்... காஞ்சீபுரத்தில் நடந்த நிகழ்ச்சி!
உண்மை சரிபார்ப்பு குழு
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மைச் சரிபார்ப்பு குழு அண்ணாமலை இந்த தகவலையும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளது. இதன்படி அந்த குழு இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில், ஒன்றிய அரசின் தொல்லியல்துறைதான் தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ரத்து செய்து உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது. இதுசார்ந்த கடிதத்தையும் அந்த உண்மை சரிபார்ப்பு குழு அதன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்த அனுமதி மறுத்தது திமுக அரசு என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த தகவல் வதந்தி என உறுதியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த சம்பவம் குறித்த உண்மையையும், உண்மை சரிபார்ப்பு குழுவால் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.
அண்ணாமலை பரப்பிய வதந்தி
அதன்படி, நாட்டியாஞ்சலி விழாவை தமிழ்நாடு ரத்து செய்யவில்லை என்றும், நாட்டியாஞ்சில் நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்தது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறைதான் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெருவுடையார் கோவிலில் சிவராத்திரி அன்று நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆகையால்தான், 20 ஆண்டுகளாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி இந்த ஆண்டு நடைபெறவில்லை என தெரிவித்துள்ளது. எனவே, அண்ணாமலை கூறிய தகவல் உண்மையல்ல என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Lok Sabha Election 2024: இதற்காகத்தான் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ