துரோகிகள் ஒன்று கூட்டிய பொதுக்குழு: டிடிவி சாடல்!
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டம்த்தினைப் பற்றியும், எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
"நேற்று துரோகிகள் ஒன்று கூடி பொதுக்குழு என்ற பெயரில் கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக, எதிராக ஒரு கூட்டத்தை கூட்டி தியாகத் தலைவி சின்னம்மாவை பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு கொதித்தெழுந்த கழகத்தின் உண்மை தொண்டர்கள் தமிழகம் முழுவதும் துரோகிகள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மைகளை கொளுத்தி வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து காவல்துறையை ஏவி உண்மை தொண்டர்களை கைது செய்து வருகின்றனர்.
ஜனநாயக முறையில் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் பழனிச்சாமி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். அதிமுகவின் ஆணிவேரான தொண்டர்களை அசைத்து பார்க்க முயற்சித்தால் தமிழகம் நிச்சயம் உங்களை மன்னிக்காது. கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்