ஜூன் 8-ம் தேதி அந்நிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டுமென எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1996-ம் ஆண்டு டிடிவி தினகரனின் வங்கிக் கணக்கில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவிலான தொகை டெபாசிட் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. 


எழும்பூர் பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை கடந்த மார்ச் 22-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தினகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதன்பின்னர் மீண்டும் இந்த வழக்கு தேதி விசாரணைக்கு வந்தது. அதில் தினகரனின் சகோதரர் பாஸ்கரன் மட்டுமே ஆஜரானார். 


வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தினகரன், சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து சுதாகரனுக்கு மட்டும் வாரன்ட் பிறப்பித்து ஜூன் 7-ம் தேதி ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.


இந்நிலையில், மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தினகரன் ஆஜராகவில்லை. தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் ஆஜராகவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் 8-ம் தேதியன்று தினகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.