முன்பு அ.தி.மு.க இரு அணிகளாக செயல்பட்ட போது தாற்காலிக கட்சிப் பெயர்கள் கொடுக்கப்பட்டது. அதற்குபின் அணிகள் இணைந்ததால் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் அணியே உண்மையான அ.தி.மு.க என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன், சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்நிலையில் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது. இதனால் இரு அணிகளாக இருந்த நேரத்தில் சசிகலா அணிக்கு கொடுக்கப்பட்ட அதிமுக அம்மா என்ற பெயரையும் குக்கர் சின்னத்தையும் அடுத்து வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரி, தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.


டெல்லி உயர்நீதி மன்றத்தில் இந்த மனு மீதான தீர்ப்பு மார்ச் 9-ல் வெளியானது. அதில் டி.டி.வி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தினகரன் பரிந்துரைத்த கட்சி பெயர்களில் மூன்று பெயர்களில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், மதுரை மேலூரில் வரும் 15-ம் தேதி நடைபெறும் விழாவில் காலை 9 மணிக்கு தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்து கொடியை அறிமுகப்படுத்தவுள்ளதாக டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். 


தனது கட்சிக்காக டெல்லி நீதிமன்றத்தில் பரிந்துரை செய்திருந்த அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆர் அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று பெயர்களில் ஒன்றினைதான் டிடிவி தினகரன் அறிவிக்கவுள்ளார்.