சென்னை: டிடிவி தினகரன் குறித்து தங்க தமிழ்செல்வன் கோபமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் டிடிவி தினகரனின் உதவியாளரிடம் தங்க தமிழ்ச்செல்வன், "பொட்டத்தனமான அரசியல் செய்வதை உங்கள் அண்ணனை நிப்பாட்டச் சொல்லுப்பா. நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள். பேடித்தனமான அரசியல பண்ண வேணாம்னு உங்க அண்ணன்ட சொல்லிடு. இந்த மாதிரி அரசியல் செய்தால் தோற்று தான் போவிங்க. என்றைக்கும் ஜெயிக்க மாட்டிங்க’ எனக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆடியோ மூலம் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும், அ.ம.மு.க. மாநில கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என்பது தெளிவாகியுள்ளது. மேலும் தினகரன் குறித்து தவறாக பேசியதால், தங்க தமிழ்ச்செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா? தினகரனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்ற கேள்விகள் எழுந்தது.


இந்நிலையில், இன்று  செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியது, தங்க தமிழ்ச்செல்வன் மீது வந்த புகார்களை குறித்து விளக்கம் கேட்டேன். அதற்கான விளக்கத்தை என்னிடம் கூறினார். இனிமேல் அதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்க போவதில்லை. ஆனால் இனி செய்தியாளர்கள் சந்திப்பில் ஒழுங்காக பேசவில்லை என்றால், செயலாளர் மற்றும் கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவிக்கு வேறு நபரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்தேன். 


தங்கதமிழ்ச்செல்வன் விஸ்வரூபமெல்லாம் எடுக்க மாட்டார். என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார். யாரையும் பொறுப்பில் இருந்து நீக்க அச்சமோ, தயக்கமோ எனக்கு இல்லை. ஆனால் தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை. இதை அவர் புரித்துக்கொள்வார்


மேலும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது, சபாநாயகருக்கு எதிராக தான் வாக்களிப்பேன் என்று தினகரன் தெரிவித்தார்.


மேலும் ஜூலை முதல் வாரத்தில் அமமுக புதிய நிர்வாகிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறினார்.