லஞ்சம் கொடுத்த வழக்கு: டெல்லி புறப்பட்டார் டி.டி.வி. தினகரன்
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி காவல் துறை குற்றப்பிரிவு போலீஸார் அளித்த சம்மனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக டி.டி.வி.தினகரன் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரண்டாக பிரிந்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என களம் கண்டது. இதனால், அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை சசிலகா தரப்புக்கு சாதகமாகப் பெறுவதற்கு டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கடந்த 16-ம் தேதி டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவினர் கைது செய்தனர். இதையொட்டி, சுகேஷ் தங்கியிருந்த அறைக்குள் சோதனையிட்ட காவல் துறையினர், ரூ.1.30 கோடியை பறிமுதல் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக டெல்லி போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத், இன்ஸ்பெக்டர் நரேந்திர ஷாகல் ஆகியோர் கடந்த 19-ம் தேதி சென்னை வந்தனர். பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில், அவரை நேரடியாக சந்தித்து இன்று(சனிக்கிழமை) டெல்லி போலீஸ் நிலையத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்ற சம்மனை அவரிடம் வழங்கினர்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி காவல் துறை குற்றப்பிரிவு போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜராக டி.டி.வி.தினகரன் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை டி.டி.வி.தினகரன் ஏற்கெனவே திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.