சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த தஹில் ரமானி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.


இந்நிலையில், தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் அமைப்பு, நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பான முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள மணிக்குமாரை, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரைத்தது. மேலும், உச்ச நீதிமன்றத்துக்கு பல உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.



இந்தியாவின் மிகப் பழமையான நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் (தலைமை நீதிபதியை சேர்த்து) பணியிடங்கள் உள்ளன. தற்போது 60 நீதிபதிகள் பணியில் உள்ளனர். மீதமுள்ள பணியிடங்கள் காலியாக உள்ளது.


எனினும், 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேகாலயா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை சேர்த்து மொத்தமே 3 நீதிபதிகள்தான் உள்ளனர். மிகப்பெரிய நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக உள்ள ஒருவர் சிறிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது அசாதாரணமானது என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


நீதித்துறையில் பணியிட மாற்றம் என்பது நிர்வாகம் சார்ந்தது என்றாலும், தஹில் ரமானி எதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளார் என்பது தெரியவில்லை.