மோடிக்கு எதிராக கருப்புக்கொடி - வைகோ உட்பட மதிமுக தொண்டர்கள் கைது
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியதால் வைகோ உட்பட மதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை - மதுரை இடையே தேஜஸ் ரயிலின் சேவை, மதுரை ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை என மொத்தம் ரூ,40,000 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார்.
திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தார். அவரை வரவேற்க முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உட்பட பலர் அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம், காவிரி விவகாரம், மேகேதாட்டுவில் அணை, நீட், ஹைட்ரோகார்பன் திட்டம் உட்பட பல விவகாரங்களில் மோடி அவர்கள் தமிழகத்துக்கு துரோகம் செய்து விட்டார் எனக் கூறி இன்று காலை முதலே பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் கருப்புக்கொடி காண்பித்தும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் பிரதமர் மோடுக்கு எதிராக கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர்.
அப்பொழுது அங்கு வந்த பாஜகவினர் மதிமுகவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் மோதலாக மாறியதால் கல்வீச்சு ஏற்ப்பட்டு. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் வைகோ உட்பட மதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.