நாளை(டிசம்பர் 3) உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-


"உலகில் பல்வேறு அக புற சூழ்நிலைகளின் காரணங்களால் ஊனம் ஏற்பட்டு சமுதாயத்தின் எல்லா நிலையிலும் வாழ்வுரிமைக்காக போராடிக் கொண்டு வருகிறார்கள் மாற்றுத் திறனாளிகள். வேதனையிலே சுழன்று கொடிய இருண்ட வாழ்வில் விடியலை எதிர்பார்க்கும் மாற்றுத் திறனாளிகள் அதிகார வர்க்கத்தினாரால் அலைகழிக்கப்பட்டு, அவமதிப்புக்கு உள்ளாகிறார்கள். காக்க வேண்டிய அரசின் கரங்களோ உரிமைகளை தர மறுக்கின்றது. மாற்றுத் திறனாளிகள் கேட்பது பிச்சை அல்ல, உரிமை. அவர்களின் உரிமைகளை அரசு தர மறுத்தபோது மனம் தளராமல் நீதிமன்றங்களின் கதவைத் தட்டி தீர்ப்பினைப் பெற்றார்கள். 


மாற்றுத் திறனாளிகளால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை என்று தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் உள்ளது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு. உலகப் பொதுமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், ஊனங்களை அங்கீகரித்து கல்வி, வேலைவாய்ப்பு, வன்கொடுமை உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளின் 21 வகையான பிரச்சினைகளை சீராய்வு செய்து கடந்த டிசம்பர் 28, 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றிய பின்பும், தமிழக அரசு அதை ஏற்று நடைமுறைப்படுத்தாமல் உள்ளது கண்டனத்திற்கு உரியது.


எனவே உடனடியாக இச்சட்டத்தை அமல்படுத்தி, மாற்றுத் திறனாளிகள் ஆணையம் அமைத்திட வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் விடிவெள்ளி ஹலன் கெல்லர், என்னால் எல்லாவற்றையும் செய்யமுடியாவிடினும் சிலவற்றை செய்ய முடியும் என்று சொன்னார். அதற்கேற்ப தமிழ்நாட்டில் பிறந்த சாதனைத் தமிழன் மாரியப்பன் பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்றுத்தந்துள்ளார். என்னுடைய தலைமையில் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மக்கள் மன்றத்தை உருவாக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருவதுடன், திருப்பதி தேவஸ்தான பாலாஜி மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர் ஜெகதீஷ் அவர்கள் மூலமாகவும் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து மறுவாழ்வுப் பணிகளை மனநிறைவுடன் செய்து வருகிறேன்.


நாடாளுமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதித்துள்ளேன். காலத்தால் கைவிடப்பட்டவர்களாக நிம்மதி வேண்டி சாய்வதற்கு தோள்களை தேடும் மாற்றுத் திறனாளிகளே நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள். முன்னேற்றப் பாதையில் தடைக்கற்களாக இருக்கும் அதிகாரவர்க்கத்தின் மன ஊனத்தை உடைத்தெறியும் காலம் விரைவில் வரும். இன்று இருக்கும் நிலை நாளை இருக்காது. 2018 ஆம் ஆண்டு நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.


சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ உலக மாற்றுத் திறனாளிகள் (03.12.2017) நாளில் எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரித்தாக்குகிறேன்."


என குறிப்பிட்டுள்ளார்!