மக்களவை தேர்தலுக்குப் பின் வைகோ மதிமுக-வை திமுக-வுடன் இணைத்து விட்டாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை என அழகிரியின் மகன் துரை தயாநிதி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக-வில் இணைய எவ்வளவோ முயன்றும் அது சாத்தியாமாகததால் அதிருப்தியில் இருக்கிறார் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. வெளிநாட்டில் இருந்து  அண்மையில் மதுரை திரும்பிய அவர், ஒரு வாரத்தில் தனது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் வைகோ-வை கிண்டல் செய்யும் விதமாக அழகிரியின் மகன் துரை தயாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...


"தமிழகத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த அரசியல்வாதி கோபால்சாமி, தேர்தலுக்குப் பின் மதிமுக-வை திமுக-வுடன் இணைத்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை" எனப் பதிவிட்டிருக்கிறார்.



அந்த பதிவின் கீழே ஒரு வீடு அதை நோக்கி ஒரு அம்புக்குறி அந்தப் பாதையில் ஓர் ஆமை என்று குறியீடும் போட்டிருக்கிறார். 


ஆமை புகுந்த வீடு என்ற பழமொழி உண்டு. அதைக் குறிப்பிடும் வகையில் மதிமுக திமுக-வுக்குள் புகுவதாக சொல்லியிருக்கிறார் துரை தயாநிதி.


சில மாதங்களுக்கு முன்னதாக மூத்த அரசியல்வாதியும், திராவிடர் கழகத் தலைவருமான வீரமணியை துரை தயாநிதி மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்குப் பரவலாக கண்டனங்கள் கூட எழுந்தன. இந்நிலையில், தற்போது அவர் மற்றுமொரு மூத்த அரசியல்வாதியான வைகோவைக் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.