சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து வல்லூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: வல்லூரில் இயங்கி வரும் அனல் மின்நிலையத்தின் 3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் வீதம் 1500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் வல்லூர் அனல் மின்நிலைய நிர்வாகம் எண்ணூரில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சரவணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 


இந்த மனுவில், வல்லூர் அனல்மின் நிலையம் மத்திய அரசின் உத்தரவை மீறி சதுப்பு நிலங்களில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எண்ணூர் சதுப்பு நிலங்களில் நிலக்கரி சாம்பலை கொட்ட வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு தடை விதித்தது. 


மேலும், வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசு அளித்த அனுமதி கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. 


அனுமதியை புதுப்பிப்பதற்கான கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து ஆலை இயங்கி வந்துள்ளதாக குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்றம், ஆலை தொடர்ந்து செயல்பட தடை விதித்தது. 


இதனையடுத்து வல்லூர் அனல் மின் நிலையம் இன்று முதல் மூடப்படகிறது. இதுகுறித்து ஆலை நிர்வாகம் தெரிவிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.