வர்தா புயலால் பாதிப்பு இழப்பீடு வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கி அவர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தமிழக அரசை
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதைக்குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது:-
வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் இன்னும் மீளமுடியாமல் தத்தளித்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். நிவாரண பணிகளுக்கு அமைச்சர்கள் குழு, அதிகாரிகள் குழு என்று அமைக்கப்பட்டிருந்தாலும் அந்த குழுக்கள் எல்லாம் மக்களின் சிரமங்களை போக்க முடியவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மற்றும் புறநகரில் மிக கொடுமையான சேதங்களை ஏற்படுத்திய வர்தா புயல் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கரும்பு மற்றும் வாழை பயிர்களை அடியோடு சேதப்படுத்திருப்பதாக கூறியுள்ளார். பல இடங்களில் வாழை, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியிருப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின் புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்திலும் இதேநிலை நீடிப்பதாக தெரிவித்துள்ளார்.
நெற்பயில், சவுக்கு, வேர்கடலை பயிர்கள் எல்லாம் பெரும் சேதத்திற்குள்ளாகி விவசாயிகள் துயரத்திற்குள்ளாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே விவசாயிகளின் கூட்டுறவு மற்றும் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.