வேலூர் தொகுதியில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையின் அடிப்படையில் வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தல் திட்டமிட்டப்படியே நடக்கும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


இதனையடுத்து, திமுக பொருளாளர் துரைமுருகன் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை ஆகும் என ஆவேசமாக கூறியுள்ளார்.


முன்னதாக, கடந்த மாதம் 29-ஆம் தேதி இரவு முதல் 30-ஆம் தேதி இரவு வரை துரைமுருகன் வீடு மற்றும் பள்ளி, கல்லூரியில் வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ஆம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் மீண்டும் சோதனை நடத்தினர்.


சோதனையின் போது காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகன் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாகப் பதுக்கிவைக்கப் பட்டிருந்த பணம் சிக்கியது. பணத்துடன் வாக்களர் பெயர் பட்டியலும் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தொகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து திமுக பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது சகோதரியின் கணவர் தமோதரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.