திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடையில் காட்சியளிக்கும் திருவள்ளுவர் படத்தினை துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு அவர்கள் இன்று பகிர்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவி உடையுடன் கழுத்தில் ருத்ராட்சம் மாலை, நெற்றியில் திருநீற்று பட்டை, குங்கும பொட்டு உடன் கூடிய திருவள்ளுவர் படத்தை துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.



இந்த படத்தை வெங்கைய்யா நாயுடு பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, காவி அணிந்த திருவள்ளுவர் படத்தை நீக்கும்படியும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிடுமாறும் பலர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டனர். இதனையடுத்து மீண்டும் எந்த ஒரு மத அடையாளமும் இன்றி, வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை வெங்கைய்யா நாயுடு பதிவிட்டார். இதன் பின்னர் சிறிது நேரத்தில், காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெங்கையா நீக்கினார்.


இந்த பதிவில் அவர் குறிப்பிடுகையில்., "சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்.  அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது. 



அறநெறி, மாண்புகள், தார்மிகநெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல் எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக திகழ்கிறது!" என குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் ஒன்றை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்த பதிவினை அடுத்து திமுக உள்பட எதிர்கட்சிகள் தரப்பில் இருந்து பாஜக-விற்கு கடும் எதிர்ப்பு தெரிவிகப்பட்டது குறிப்பிடத்தக்கது.


திருவள்ளுவர் பல குறள்களை இயற்றியிருந்தாலும் அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதில் பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் பாஜக-வின் இந்த செயல்பாடு தலைவர்கள் பலராலும் கண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.