விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், அதிமுக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்தார். ‘பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுனர் மீதும், பேனர் அச்சடித்தவர் மீதும் பழி போடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல் உள்ளனர்’ என்றார் விஜய். மேலும், யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் என விஜய் பேசினார். இது, எடப்பாடி பழனிச்சாமியின் அரசை மறைமுகமாக விமர்சிதுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், அதிமுக பழுத்தப்பழம் என்பதால் கல்லடி படுகிறது என நடிகர் விஜய்யின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார், பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக பழுத்தப்பழம் என்பதால் கல்லடிபடுகிறது. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது தாக்குதல் நடக்கிறது என தெரிவித்தார். 


மேலும், நடிகர் விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்று கூறிய அவர், இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என  நம்பிக்கை தெரிவித்தார்.