காவல்துறைக்கு வாக்கி - டாக்கி வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதால், இந்த முறைகேடு சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது அறிக்கையில் கூறப்பட்டதாவது:-


தமிழகத்தில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரித்து தடுக்க வேண்டிய அமைப்பான காவல்துறையில் மிகப்பெரிய அளவில் ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளன. காவல்துறைக்கு வாக்கி -டாக்கி வாங்குவதில் நடந்த முறைகேடுகள் குறித்து விளக்கமளிக்கும்படி காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் கடிதம் எழுதியிருப்பது இதை உறுதி செய்துள்ளது.


காவல்துறையினரின் தகவல் தொடர்புக்காக வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 வினாக்களை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த வினாக்கள் மிகவும் முக்கியமானவை. காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோது, 


மோட்டோரோலா சொல்யூசன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரினால் தான் அவற்றுக்கு இடையே போட்டி ஏற்பட்டு ஒப்பந்தத் தொகை குறையும். அதற்கு மாறாக ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஒப்பந்தம் கோரியிருந்தால் அந்த ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்து விட்டு, புதிதாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும். இது தான் காலங்காலமாக உள்ள நடைமுறையாகும். ஆனால், வாக்கி-டாக்கி வாங்கும் விஷயத்தில் மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளார்.


2017-18-ம் ஆண்டில் காவல்துறையை நவீனமாக்கும் திட்டத்தின்படி ரூ.47.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதைக் கொண்டு 10 ஆயிரம் வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக மொத்தம் ரூ.83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் வெறும் 4000 வாக்கி-டாக்கிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. 


அனுமதிக்கப்பட்ட தொகைக்கும் கூடுதலாக ஒப்பந்த வழங்கியது மிகப்பெரிய விதிமீறலாகும். அதுமட்டுமின்றி பெருமளவில் ஊழலும் நடைபெற்றுள்ளது. தமிழக அரசு ஒதுக்கிய ரூ.47.56 கோடியில் 10000 வாக்கி டாக்கிகள் அதாவது ஒரு வாக்கி-டாக்கி ரூ.47,560 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாக்கி- டாக்கியின் விலை ரூ.47,560 என்பதே வெளிச்சந்தை விலையை விட மிக மிக அதிகம் ஆகும்.


ஆனால், அதைவிட மிகவும் அதிகமாக ஒரு வாக்கி-டாக்கி ரூ.2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப் பட்டிருக்கிறது. இதைவிடக் கொடுமை என்னவென்றால், அந்த நிறுவனம் தமிழக காவல்துறைக்கு வழங்கவிருக்கும் வாக்கி-டாக்கிகள் முரண்பட்ட இருவேறு தொழில்நுட்பங்களைக் கொண்டவையாகும். ஒரு தொழில் நுட்பம் இன்னொரு தொழில்நுட்பத்துடன் ஒத்துப்போகாத நிலையில் இந்தக் கருவிகளை வாங்குவதால் எந்த பயனும் ஏற்படாது என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் வழங்குவதாக இருந்தால் கூட, அதற்கான தகுதிகளைக் கொண்ட நிறுவனங்கள் தான் ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் பங்கேற்க அனுமதிக்கப்படும். ஆனால், ரூ.83.45 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ள நிறுவனத்திற்கு, ஒப்பந்தம் பெறுவதற்கான அடிப்படைத் தகுதியான தகவல் தொடர்பு கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான உரிமம் கூட இல்லை. அந்த உரிமத்தை 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வாங்கித் தருவதாக அந்த நிறுவனம் உத்தரவாதம் அளித்ததை ஏற்று இந்த ஒப்பந்தத்தை காவல்துறை வழங்கியிருக்கிறது.


மாநிலத்தின் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படாமல் அடிப்படைத் தகுதிகள் கூட இல்லாத நிறுவனத்திற்கு விதிகளை மீறி ஒப்பந்தம் வழங்கப் பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. 


எனவே, காவல்துறைக்கு வாக்கி-டாக்கி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த ஊழல் குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.


இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.