இன்று இந்திய துணைக் கண்டம் முழுவதும் ஆசிரியர் நாள் விழா கொண்டாடப்படுகிறது. மாணவர் சமுதாயம் ஆசிரியர்களுக்கு காட்டக்கூடிய நன்றி உணர்ச்சி நாளாக இந்நாள் கருதப்படுகிறது என வைகோ கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் அவர் கூறியது, கல்லூரியின் உதவி விரிவுரையாளராக பணியில் தொடர்ந்த டாக்டர் சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் பேராசிரியராக, பல்கலைக் கழக துணை வேந்தராக, யுனெஸ்கோவின் இந்தியத் தூதராக, பல்கலைக் கழக ஆணையத்தின் தலைவராக என பல உயரிய பொறுப்புக்களை வகித்து, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றினார். கல்வித்துறையில் மாணவர்களுக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது பிறந்தநாள் ஆசிரியர் நாளாக நன்றியுடன் கொண்டாடப்படுகிறது.


கேடில் விழுச் செல்வமாம் கல்வியை இளம் மாணவர்களுக்கு ஊட்டி அன்பு, அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி முதலான செல்வங்களையும் அள்ளித் தந்து அவர்களை சான்றோர்களாக உயர்த்தும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அரும்பணி ஆற்றிவரக் கூடிய ஆசிரியர் பெருமக்கள் நமது நிரந்தர பாராட்டுக்கும், பெருமைக்கும் உரியவர்கள்.


விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் என சமுதாயத்தில் உள்ள பிற மக்கள் போலவே ஆசிரியர் பெருமக்களும் அரசின் முறையற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு வேதனையுடன் வாழ்நாளை கடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் வருங்கால இளம் தலைமுறையினரை உயர்த்திட வேண்டும் என்ற கடமை உணர்வுடன் ஆசிரியர்கள் தங்கள் புனிதமான பணியை தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


கல்வி அறிவிலும், பிற திறனிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இந்நாளில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்கின்றன. அத்தகைய பெருந்தகையாளர்களுக்கும், கல்விப் பணியில் தூய நோக்குடன் தொடர்ந்து சேவை செய்யும் ஆசிரியர் சமுதாயத்தினர் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.