சென்னை வானகரத்தில் பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு நேற்று கூடியது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் இருந்தனர். இதனால் பொதுக்குழுவுக்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கட்சியின் முன்னணி நிர்வாகிகள் முதற்கொண்டு கடைமட்ட தொண்டர்கள் வரை கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர் மீது தண்ணீர் பட்டில் வீசப்பட்டதாலும், அவர் வந்த வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதாலும் பதற்றமான சூழல் நிலவியது. பொதுக்குழுவில் புதிதாக எந்த தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்ததால் ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் கடும் எதிர்ப்புகளையும், அவமானங்களையும் எதிர்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவே அவசர அவசரமாக தலைநகர் டெல்லி புறப்பட்டு சென்றார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்க டெல்லி செல்வதாக செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ் தெரிவித்தார். இருப்பினும் ஒற்றைத் தலைமை பிரச்னையை சமாளிப்பது தொடர்பாக பாஜக தலைவர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உதவியை நாடியே ஓ.பி.எஸ் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 


இதனிடையே சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்லத்திருமணத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுக பொதுக்குழு குறித்து மறைமுகமாக விமர்சித்தார். ''மற்றொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த பிரச்னைக்கு நால் செல்லவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியமும் இல்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்'' இவ்வாறு முதலமைச்சர் திருமண நிகழ்ச்சியில் கூறியிருந்தார். 


மேலும் படிக்க | டெல்லியில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்! பொதுக்குழுவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு


இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மும், ''1.12.2021 அன்று செய்யப்பட்ட சட்டவிதி திருத்தங்களுக்கு நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறவில்லை. எனவே அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன. 


தற்போதைய நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக தொடர்கின்றனர். உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு பஞ்சாயத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு தான் உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது அதிமுகவின் விதி. மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டால் பொதுக்குழுவை கூட்டலாம். எனவே, வரும் 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் அனுமதி அவசியமில்லை. 


அதிமுகவில் நடைபெறுவதை கண்டு திமுகவினர் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டாம். திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம்''. இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்தார். 


மேலும் படிக்க | கோத்ரா ரயில் எரிப்பு - பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe