நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றவர்கள் யார்? உயர்நீதிமன்றம் கேள்வி!

நிலத்தடி நீர் எடுக்க வாகன அனுமதி பெற்றவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது.
நிலத்தடி நீர் எடுக்க வாகன அனுமதி பெற்றவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது.
சென்னை நங்கநல்லூரில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்ட நிலையில்., இன்று இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது இந்த வழக்கு தொடர்பாக மனு தாரர் தரப்பில் புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யபட்டன.
அந்த புகைப்படங்களை பார்த்த நீதிபதிகள், சட்டவிரோதமாக நீர் எடுக்கப்படவில்லை என எந்த அடிப்படையில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது? என கேள்வி எழுப்பினர். புகார்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால் சமுதயத்தை மாற்ற முடியும் என கருத்து தெரிவித்தனர்.
மேலும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பான விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் நீர் எடுத்து செல்வதற்கான வாகன அனுமதி பெற்றவர்கள் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.
சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.