காவல்துறையினரின் மன அழுத்தம் தொடர்பான உரையாடல்கள் பேசிப்பேசி அலுத்த விஷயம்தான். ஆனாலும், காவலர்களின் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. முதலில் மன அழுத்தம் ஒருவரைத் தற்கொலைவரை இட்டுச்செல்லுமா?, எந்த இடத்தில் அது வாழ்வைத் துண்டித்து தற்கொலையை நோக்கி ஒரு மனித மனத்தை இட்டுச்செல்கிறது? என்ற உளவியல் பிரச்சினைகளுக்கு நாம் செல்ல வேண்டியதில்லை. நாம் இப்போதைக்கு காவல்துறை பணியின் வடிவத்தைப் பார்த்தால் ஓரளவுக்கு அதன் சிக்கலைப் புரிந்துகொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவல்துறை பணியில் உள்ள அதிகாரத்தின் சுழற்சியைப் பார்த்தாலே நமக்கு மூச்சு முட்டும். ஓர் உதாரணமாக, தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சிறிய சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பிரச்சினை அரசின் காதுக்குச் சென்று, அந்த உத்தரவு படுவேகமாக காவல்துறை உயர் அதிகாரியிடம் வந்து விழும். அவர், தனக்கு கீழ் உள்ள உயர் அதிகாரிகளிடம் அதே வேகத்துடன் சீறுவார். அவர் தனக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகளிடம், அதிகார கோரத்துடன் உறுமுவார். அவர் தனக்குக் கீழே...அதற்கடுத்தவர் தனக்குக் கீழே...என்று அதிகாரத்தின் கோர முகம் கடைநிலைக் காவலர் வரை அரக்கத்தனமாக வந்து சேர்கிறது. கடைசியில் உள்ள காவலரைக் கவனியுங்கள். அவர் திரும்பி தனக்குக் கீழே பார்க்கும்போது யாருமே இருக்கமாட்டார்கள். ஆனால், சமூகம் இருக்கிறது; மக்கள் இருக்கிறார்கள். அவர் தனது அதிகாரத்தின் முகத்தை மக்கள் மேல் திணிக்க வேண்டியிருக்கிறது அல்லது தன்னை அறியாமல் அவரது மனம் திணிக்கிறது என்றுகூட சொல்லலாம்.


இந்த அதிகார சுழற்சியில் யார் மீதும் நேரடையாக நாம் வெறுப்பையோ, குற்றத்தையோ சுமக்க வேண்டியிருக்கிறது. கைநீட்டிக் காட்ட நமக்கு ஒரு ‘நபர்’ தேவைப்படுகிறார். இதன் பிரச்சினைதான் என்ன? காவல்துறையின் அமைப்பே சிக்கலான வடிவமாக இருப்பதால்தான் இந்த உளவியல் சிக்கல் ஏற்படுவதாக உளவியல் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | தேனி எல்லையில் சிக்கிய 123 கிலோ கஞ்சா மூட்டை..!


காவல்துறை அமைப்பே ‘Obey The Order’ என்ற Structure-ல் இருப்பதால் பெரும்பாலும் கடைநிலைக் காவலர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தங்களால் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடைநிலை ஊழியர்களாகத்தான் இருக்கின்றனர். சம்பவங்களின் ஆழத்தைப் பொறுத்து உயர் அதிகாரிகளும் அதிகாரத்தின் இந்தக் கோரப்பசியில் மாண்டுபோகின்றனர். சமீபத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை ஓர் உதாரணம். இன்னும் எத்தனையோ காவலர்கள் இதில் அடங்கும். இதன் புள்ளிவிவரங்களும் நமக்குக் கவலைகளைத் தான் அளிக்கின்றன.


மத்திய உள்துறை அமைச்சகம் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் 166 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதேபோல், மகாராஷ்டிராவில் 161 காவலர்களும், கேரளாவில் 61 காவலர்களும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 27 போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்வதாக தேசிய குற்றப்பதிவுத் துறை ஆவணத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. காவலர்களுக்கு வெறும் வார விடுமுறை அளிப்பதால் மட்டும் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை, கிள்ளுக்கீரை நடவடிக்கையாகத்தான் பார்க்க முடிகிறது.


காவலர்களுக்கென்று தனிச்சங்கம் அமைக்கும் முயற்சி தொடர்ந்து தோல்வியில் முடிவதற்கான காரணம் என்ன? ஒருவேளை அப்படியொரு சங்கம் உருவானால் அரசுக்கும், காவல்துறைக்குமான இடைவெளி எவ்வளவு தூரம் குறையும் என்பன போன்ற பல சிக்கல்கள் இருப்பதால் இந்த முயற்சி இன்னும் கிடப்பிலேயே கிடக்கிறது. இதுபுறமிருக்க, காவலர்களின் மன அழுத்தம் தற்போது வேறு தளத்துக்கு இடம்பெயரும் ஆபத்து நோக்கி நகர்ந்துவருகிறது. பெரும்பாலான காவலர்கள் சுற்றுச்சூழல், பருவநிலை, அதிக நேரம் பணி, நேரம் தவறிய உணவு உண்ணும் முறை, இறுக்கமான உடைகள் என்று பலவிதமான யதார்த்த சிக்கல்களுக்கு ஆளாகி நோய் பாதிப்பில் ஆளாகின்றனர். இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக கையாளத் தவறியதன் விளைவு, இப்போது புற்றுநோய் வரை வந்து நிற்கிறோம். 


மேலும் படிக்க | இனியும் மெத்தனம் வேண்டாம்.. எதிர்க்கட்சிகளை எச்சரிக்கும் திருமாவளவன்..


மன அழுத்தம் மட்டுமே புற்றுநோய்க்குக் காரணம் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்றாலும், மன அழுத்தம் புற்றுநோய்க்கு மிக முக்கியமான பங்கைச் செலுத்துவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான காவலர்கள் தற்போது புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். அவர்களின் குடும்பங்களுக்கும் புற்றுநோய் இருப்பதாகவும் ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இப்போதுதான் தமிழக காவல்துறை மெல்ல இதன் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. அவர்களுக்காக முதல் முறையாக புற்றுநோய்க்கான இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் கடந்த 2-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காவல் துறையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யவும், வழிகாட்டவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஆலோசனைகள் வழங்குவதற்காக தலைமைக் காவலர் லீலாஸ்ரீ நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


யார் இந்த லீலாஸ்ரீ ?


பரபரப்பான ஒரு மதிய வேளையில் சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சுற்றியிருந்தவர்கள் மயங்கியவரைச்  சுற்றியிருந்தார்கள். அங்கு வந்த பெண் ஒருவர், இன்னொரு நபரின் உதவியோடு மயங்கியவரைத் தூக்கி மருத்துவமனையில் சேர்த்தார். அவர் உயிரிழந்துவிட்டதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சடலத்தை சொந்த ஊருக்கும் அனுப்பிவைத்தார் அந்தப் பெண். இந்தச் செயலுக்காக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து அந்தப் பெண்ணுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். அந்தப் பெண் லீலாஸ்ரீ.! விளையாட்டு வீரர்.! அதுமட்டுமல்லாமல் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலர். ரயில்வேயில் பணியாற்றிய இவரது கணவர் புற்றுநோயால் காலமானார். அடுத்த ஆறே மாதத்தில் லீலாஸ்ரீயின் தாயாரும் மாரடைப்பால் மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவரை நீண்ட காலமாக உடன் இருந்து கவனித்து வந்தவர் லீலாஸ்ரீ. இதனால், புற்றுநோயின் கொடுமை, அதனால் ஏற்படும் மன அழுத்தம், பாதிப்பு குறித்து அவருக்கு நன்கு தெரியும் என்பதால் இந்தப் பொறுப்பில் அவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.   


மேலும் படிக்க | தமிழ்நாடு நம்பர்-1 நிலையை அடைய வேண்டும்.! - மு.க.ஸ்டாலின்


மூர்க்கத்தனம் மிக்கவர்கள் என காவலர்களைப் பொதுமைப்படுத்திப் பார்க்காமல், அவர்களுக்கான சிக்கல்களையும், கோரிக்கைகளையும் மனம் திறந்து உரையாட ஒரு சமூகம் முன்வர வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர்கள், காவல்துறையினர் மாநாடு நடைபெற்று வரும் இந்தச் சூழலில், காவலர்களின் இறுக்கமான அந்த மௌனத்தை உடைத்து வெளிப்படையான உரையாடலுக்கு அழைக்குமா தமிழக அரசு ?!!. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR