தினமும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜாவால் கீழ் நீதிமன்றத்தை அணுக முடியாதது ஏன்? என உயர்நீதிமன்றம் பாரதிராஜாவுக்கு கேள்வி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜனவரி 18 ஆம் தேதி நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, இந்து கடவுளான விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்ததுடன், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசியிருந்தார். 

இது தொடர்பாக, இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் நாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிராஜா மீது வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில், பாரதிராஜாவுக்கு சில நிபந்தனைகளுடன் முன்ஜாமீனை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது. இந்நிலையில், முன் ஜாமீன் உத்தரவை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று புதிய மனுவை பாரதிராஜா தாக்கல் செய்திருந்தார்.


இன்று மீண்டும் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பாரதிராஜவால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பியது. மேலும், கால நீட்டிப்பு கோரி கூடுதல் மனுவாக தாக்கல் செய்யாமல் புதிய மனுவாக தாக்கல் செய்ததும் தவறு என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


இதனைதொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை  வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 2 வது முறையாக முன்ஜாமீன் கோரியது பற்றி இயக்குநர் பாரதிராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.