வைரமுத்து விவகாரத்தில் ரஜினிகாந்த் மவுனம் காப்பது ஏன்? சீமான் கேள்வி
வைரமுத்து விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகளால் உயர்ந்த ரஜினிகாந்த் ஆண்டாள் விவகாரத்தில் மவுனம் காப்பது சரியல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி வைரமுத்துவிற்கு எதிராக இந்து அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே வைரமுத்துவிற்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ரஜினியை வைரமுத்து நண்பராக பார்க்கிறார். வைரமுத்துவின் வரிகளால் வளர்ந்தவர் ரஜினி.தன்னை நண்பராக பார்க்கும் வைரமுத்துவிற்கு ரஜினி ஆதரவு தெரிவிக்கவில்லை. இதிலிருந்தே வைரமுத்துவை ரஜினி எவ்வாறு பார்க்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும் என சீமான் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் அவர்,ஹெச்.ராஜா பேசியது தவறாகும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். வைரமுத்து விவகாரத்தில் வம்படியாக அரசியல் செய்வது நல்லதல்ல. வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னர் மறக்க வேண்டும். மறப்பதும் மன்னிப்பதும் தான் தமிழர் பண்பாடாகும் கருத்து கூறியவர்களின் தலையை வெட்டுவதாகக் கூறுவது இழிவான அரசியல் என்றார்.