‘வீட்டுக் காவலில்’ காஷ்மீர் அரசியல் தலைவர்கள்; ப.சிதம்பரம் கண்டனம்..
அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்!!
அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்!!
காஷ்மீரில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லாவிதமான ஜனநாயக மரபுகளையும் மத்திய அரசு மீறுவதாக அவர் கண்டித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் திடீரென 40,000 ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளும் அமர்நாத் யாத்ரீகர்களும் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு எச்சரித்தது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் வழங்குகிற அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35A பிரிவுகளை மத்திய அரசு நீக்கக் கூடும் என்கிற கருத்து நிலவுகிறது. மேலும் ஜம்மு காஷ்மீரை 3 பகுதிகளாக பிரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மிகப் பெரும் தாக்குதலுக்கு மத்திய அரசு திட்டமிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஜம்மு காஷ்மீரில் அசாதாரண நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன் உள்ளிட்டோர் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில்; காஷ்மீரில் எந்த ஒரு விஷப்பரீட்சையும் செய்ய வேண்டாம் என தாம் முன்பே எச்சரித்ததையும் ப.சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் தமது எச்சரிக்கையை மீறி மத்திய அரசு விஷப்பரீட்சையில் ஈடுபட தயாராகி வருவதாகவும் டிவிட்டரில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாள் முடிவதற்குள் காஷ்மீர் பற்றிய மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொள்வதற்காக பரபரப்புடன் காத்திருப்பதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.