தமிழக அரசின் நடவடிக்கையால் மது விற்பனை குறைந்தது
தமிழகம் முழுவதும் 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வந்தன. மது விற்பனை மூலம் அரசுக்கு தினமும் ரூ.60 கோடி வருவாய் கிடைத்து வந்தது. இந்த நிலையில்,அதிமுக தேர்தல் அறிக்கையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் வெற்றி பெற்று, 6-வது முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற அன்று, 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று, மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் குறைப்பது மற்றும் 500 மதுக்கடைகளை மூடுவது என்பதாகும். அதன் அடிப்படையில், காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வந்த மதுக்கடைகள், மே 24-ம் தேதி முதல் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்று விற்பனை நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஜூன் 19-ம் தேதி அன்று 500 மதுக்கடைகம் மூடப்பட்டன.
டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரம் மற்றும் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், தினமும் 10 முதல் 12 சதவீதம் வரை மது விற்பனை குறைந்தது.
ஒரு நாளைக்கு ரூ.60 கோடி என்ற அளவில் இருந்த மது விற்பனை தற்போது ரூ.56 கோடியே 72 லட்சம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.